BREAKING

உள்நாட்டு செய்தி

மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்குமிடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்றது.

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் அதே வகையில் புதிய நிறுவனங்களுக்குள்ளும் உறுதிப்படுத்தப்படுவதையும், நிறுவனங்களின் கீழ் ஊழியர் உரிமைகளைப் பாதுகாப்பதையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று சுட்டிக்காட்டியதுடன், இந்த இடைப்பட்ட காலத்தில் புரிந்துணர்வுடன் செயல்பட்டு தமது பங்களிப்பை வழங்குமாறு அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புச் செயற்பாட்டின் போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கும், இதற்காக மேன்முறையீட்டு சபையொன்றை நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

வலுசக்தி சுயாதீனத்தன்மையை அரசாங்கத்தின் கீழ் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், தனியார் துறையின் பங்களிப்பைப் பெறுவதன் மூலம் அதிக போட்டித்தன்மையை உருவாக்குவதன் ஊடாக உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், அண்மைய டித்வா சூறாவளி போன்ற அவசர நிலைமைகளின் போது பொதுமக்களுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்கு இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

 

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!