கல்வி , உயர்கல்வி அமைச்சுக்கான வரவு செலவு திட்ட உரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான 2026ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுத் தேவைகள் தொடர்பான முன்-வரவு-செலவுத் திட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, அமைச்சின் கீழ் செயல்படும் ஒவ்வொரு பிரிவு நிறுவனமும் 2026ஆம் ஆண்டில் செயல்படுத்திய திட்டங்களின் முன்னேற்றமும், 2027ஆம் ஆண்டிற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளும் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணையாக நாட்டின் தொழிற்கல்வித் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது. அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் 2027ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2027–2031 காலப்பகுதிக்கான கல்வித் துறையில் முதலீட்டை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் மாற்ற திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகளும் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் கல்வியியல் கல்லூரி (வித்யாபீட) மாணவர்களுக்கான உதவித்தொகைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
#LocalNews #ministryofeducation #meeting #PrimeMinister #President @highlights

Exit mobile version