மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு இலங்கை வந்தார்

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (03)இலங்கை வந்தடைந்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமோகமாக வரவேற்றார். விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மாலைதீவு – இலங்கை இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 61 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த விஜயத்தை முன்னிட்டு, மாலைதீவு ஜனாதிபதி விமான நிலையத்தின் விசேட விருந்தினர் பகுதியில் உள்ள நினைவுப் புத்தகத்தில் குறிப்பொன்றையும் இட்டார்.

ஜனாதிபதி முகமது முய்சு, 2023 ஆம் ஆண்டு பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகம்மத் முய்சுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நாளை (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

மேலும், மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர், கொழும்பில் நடைபெறவுள்ள விசேட வர்த்தக சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி முய்சுவுடன் அவரது பாரியார் சாஜிதா முகம்மத் மற்றும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள் இதன்போது இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version